மரங்களின் தாய் திம்மக்கா

திம்மக்கா 


"நாளிதழைத் திறந்தாலே லஞ்சம்

ஊழல், கொலை, கொள்ளை,

அப்பப்பா ..."சலித்தபடி செய்தித்தாளைக்

கையில் கொடுத்தாள் பக்கத்து

வீட்டுப்பெண் மல்லிகா.


"அதை எல்லாம் தெரிவிப்பதற்குத்தானே

செய்தித்தாள் ....வேறு என்ன செய்தியை

எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டேன்.


"ஒரு நல்ல செய்தியாவது 

சொல்லணுமில்லையா?

நாட்டில் நல்லதே நடக்கலியா? "


"ஏன் நடக்கல? 

நாளும் நல்லது  நடந்துகொண்டுதான்

இருக்கிறது. அதையும் செய்தித்தாள்கள்

சொல்வதற்கு மறப்பதில்லை.

உன்  கண்களுக்குத்தான் அது

தெரியவில்லை"


"ஏன் ? நான் என்ன குருடா?"


"அப்படிச்சொல்லவில்லை.நீ

செய்தித்தாளைச் சரியாகப்

படிக்கவில்லை என்கிறேன்"


"முதல் பக்கத்தில் இருந்து 

கடைசி பக்கம்வரை

ஒன்றுவிடாமல் வாசிப்பேன்."


"அப்படிப் படித்துமா நல்ல செய்திகள்

கண்ணில்  தெரியவில்லை?.."


" பெரிய எழுத்தில் 

போட்டால்தானே கண்ணுக்குப்

பளிச்சென்று தெரியும்.

இந்த பத்திரிகைக்காரங்க நல்லகாரியத்தை

பெருசா  போடமாட்டேங்கிறாங்க "என்று

பொங்கினாள் மல்லிகா.


"ரொம்ப பொங்காத ...

நீ செய்திகளைச் சரியாக

படிக்கவில்லை என்று சொல்"


"இன்று ஏதும் நல்ல செய்தி

இருக்கிறதா என்று நீங்களே

பார்த்துச் சொல்லுங்கள்.

உங்க கண்ணுக்காவது நல்ல செய்தி

தெரிகிறதா என்று பார்ப்போம்"



"இதோ ஒரு நல்ல செய்தி."


"அப்படி என்ன நல்ல செய்தி ?"


"கர்நாடகா மாவட்டத்தில் உள்ள

கூதூர் என்னும் சிற்றூர்.

அங்கே ஆலமரங்கள் சாலையின்

இருமருங்கிலும் வரிசைகட்டி 

நிற்கின்றன.

யார் செய்த மாயம் இது?

ராணி மங்கம்மா மறுபடியும்

பிறந்து வந்துவிட்டாரா?

அப்பப்பா என்ன ஒரு குளுமை.

வெயிலே தெரியாத பயணம்.

பறவைகளின் பாட்டொலிக்கு

மரங்களின் கிளைகள் மெல்லொலி

எழுப்பி நம்மைச் சிலிக்க வைக்கின்றன.


எங்குமில்லாத அளவுக்கு ஆலமரங்கள்

எங்கிருந்து வந்தன?

ஒரே நாளில் முளைத்து வளர்ந்துவரக்

கூடியவையா மரங்கள்?

யாரின் உழைப்பு ?

எத்தனை ஆண்டுகால உழைப்பு...

யாரிந்த ஆட்சியாளர்? ....நட்டவர் யார்? 

தண்ணீர் ஊற்றி பராமரித்தவர் யார் ?


எல்லா கேள்விக்கும் ஒரே விடை

திம்மக்கா என்ற தொண்ணூறு வயதைக்

கடந்த பெண்மணி என்பது மட்டுமே."


"என்னது தொண்ணூறு வயது பெண்மணி மரம் நட்டு வளர்தாரா ?
நம்பும்படியாக இல்லையே."

"உன்னை யார் நம்பச் சொன்னது ?
ஊரை நம்புகிறது. அரசு பாராட்டி
விருது வழங்கியிருக்கிறது."

"அப்படியானால் உண்மை இல்லாமல் இருக்காது"

"திம்மக்காவிற்கு மரம் நடவேண்டும்

என்ற எண்ணம் எப்போது வந்தது

என்று தெரிந்தால் அதிர்ந்து போவாய்"


"அதிர்வதும் அதிராமல் இருப்பதும் நீங்கள் சொல்லப்போகும் செய்தியைப்

பொறுத்தது. சொல்லுங்கள் திம்மக்காவைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்."


"திம்மக்கா ஒரு சாதாரண ஏழை வீட்டுப்

பெண்.திம்மக்காவின் பெற்றோர் எல்லோரையும் போல உரிய பருவத்தில் திம்மக்காவை

சிக்கையா என்பவருக்கு மணம் முடித்து

வைத்தனர்.


அவர்கள் தங்கள் ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக

வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஆனால் ஊர் கண்...உறவினர்

கண் எல்லாம் அவர்கள் மீதுதான்

இருந்திருக்க வேண்டும்.


அதனால்தான்....

திருமணமாகி ஓரிரு ஆண்டிலேயே குழந்தை

இல்லையா...?குழந்தை இல்லையா ?எனக்

கேட்டு காயப்படுத்தும் உலகம் திம்மக்காவையும்

விட்டு வைக்கவில்லை.

மலடி..மலடி என்று சொல்லால் அடித்தது

இந்த பிற்போக்கு சமூகம்.


நொந்து போனார் திம்மக்கா....ஏன்

வெந்து போனார் என்றுதான் சொல்ல

வேண்டும்.ஒரு கட்டத்தில் காட்டோடு

பேச ஆரம்பித்தார்.

காட்டை நேசிக்க ஆரம்பித்தார்.


பெற்றால்தான் பிள்ளையா....?

இந்த உலகமும் அதிலுள்ள ஒவ்வொரு உயிரும்

தன் பிள்ளை என்று நினைப்பவள்தான்

ஒரு தாய்.காடுகளுக்குத் தாயாக மாறினார்."


"எவ்வளவு கொடுமையான உலகம்.

வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும்

ஏசும். பிள்ளை இல்லையா பெண்ணைக் குற்றம் சொல்லிச் சொல்லி

இதயத்தைக் கிழிக்கும்."


எத்தனைபேர் காயப்படுத்தினாலும்

திம்மக்கா முடங்கிப் போகவில்லை.

காடுகளைக்குத் தாயாக வேண்டும் என்று

முடிவெடுத்தார்.


அந்தத் தாயுள்ளத்தில் உதயமானதுதான்

இந்த ஆலமரம் நடும் எண்ணம்."


"ஓஹோ....ஆலமரங்களின் தயாரானார்"


"உண்மை.முதலாவது ஒன்றிரண்டு மரங்களை 

நட்டார்.

தண்ணீர் பஞ்சம் உள்ள ஊர்.

தொலைதூரத்தில் இருந்து

தண்ணீர் கொண்டு வந்து 

ஊற்ற வேண்டிய நிலைமை.

அதற்காக திம்மக்கா பின்வாங்கிவிடவில்லை.

மரங்கள்தான் என் பிள்ளைகள் என்று

தொலை தூரத்திலிருந்து தண்ணீர்

கொண்டு வந்து ஊற்றி வளர்த்தார்.

கையிலும் தலையிலும் தண்ணீரை அவர்

சுமந்து வரும் காட்சி நெஞ்சைப்

பதைபதைக்கச் செய்திடும்.

தள்ளா வயதிலும் தளரா மன உறுதியோடு

தண்ணீர் ஊற்றுகிறார் என்றால்

மரத்தின்மீது அவர் கொண்ட அன்பை 

என்னவென்பது?"


"ஆச்சரியமாக இருக்கிறது."

 

 "அவரின் இந்த முயற்சியால்

 அந்த ஊர் சாலை எங்கும்

 ஆலமரம்.

 அதில் கூடுகட்டி வாழும் பறவைகள்.

 பழுத்துத் தொங்கும் மரங்கள்.

 ஊஞ்சலாடி விளையாட கயிறுகளாய்த்

 தொங்கி நிற்கும் விழுதுகள்."


"இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாக

இருந்த திம்மக்காவைப்

 பெருமைப்படுத்த வேண்டாமா?"


"பெருமைபடுத்தாமலா?

2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு

பத்மஶ்ரீ பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது."

"ஓ...பத்மஶ்ரீ  திம்மக்கா  என்று சொல்லுங்கள்."


'உண்மை

இது செய்தித்தாளில் வந்த செய்தி.

இது நல்ல செய்தி இல்லையா?"


"ரொம்ப நல்ல செய்தி.

நம்ம ஊரிலும்  அங்குள்ள இளைஞர்கள்

எல்லாம் சேர்ந்து 

குளத்தின் வரப்பில் மரங்கள்

நட்டார்கள் என்றால் நன்றாக 

இருக்கும்."


"ஏன் நட மாட்டார்கள்? உனக்கே

இந்தச் செய்தியைக் கேட்டதும்

மரம் நட வேண்டும் என்று

தோன்றுகிறதில்லையா? 

உங்கள் ஊர் வாலிபர்களுக்கு

வராதா என்ன....? 

இதுதான் செய்தி செய்யும் மாற்றம்."


"கண்டிப்பாக...நீங்கள் சொல்வது

சரிதாங்கா...எனக்கே எங்க ஊரைச்

சுற்றி வேப்பமரம் நட வேண்டும்போல்

ஆசையாக இருக்கிறது."



"இந்தச் செய்தி திம்மக்காவைப்

பெருமைப் படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் இதை வாசிப்பவர்களையும் 

நாமும் இதேபோன்ற நல்ல காரியங்களைச்

செய்ய வேண்டும் என்று தூண்ட

வேண்டும் என்று ஒரு நல்ல நோக்கிலேயே

வெளியிடப்பட்டிருக்கும்.

அது இப்போது நடந்துவிட்டது.

நாளை இன்னொரு செய்தியோடு

வருகிறேன்.


வரட்டா....?"




Comments

Popular Posts